

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 10 தினங்களில் மட்டும் 19,760- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில், தினந்தோறும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க டெல்லி அரசு, மக்களின் நலனைக் கருதி பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் கீழ் உள்ள அபராதம், தனியார் நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணிக்கும் நபர்களுக்கு பொருந்தாது. பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமல் நடமாடுவதை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.