

புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்த அன்னா ஹசாரே, கடந்த 5 மாதங்களில் மட்டும் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடையாக வந்து உள்ளது என கூறிஉள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கட்டுரையை குறிப்பிட்டு பேசிய அவர், ஆசியாவில் இந்தியாதான் ஊழல் மிக்க நாடு என முதலிடத்தில் பிடித்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். சமூக ஆர்வலர் மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி வந்தவர் அன்னா ஹசாரே.
கடந்த 2011ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதற்காக தனது போராட்டத்தினை வெளிப்படையாக அறிவித்து நடத்தியவர், இப்போது மோடி அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் நடைபெறுகிறது, ஆசியாவில் ஊழல்மிக்க நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. இதனை நான் கூறவில்லை. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கட்டுரை குறிப்பிட்டு உள்ளது, ஆசிய நாடுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டு இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நான் அமைதியாக இருந்தேன், புதிய அரசு வந்ததும் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். இப்போது பேசவேண்டிய நேரம் வந்து உள்ளது, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து ஜான் லோக்பால் மற்றும் விவசாய நலனுக்காக மற்றொரு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளேன், என கூறிஉள்ளார் அன்னா ஹசாரே.