

மதனப்பள்ளி,
ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டு இருப்பதாக ஆனந்த் அம்பானி தெரிவித்தார்.
ஆந்திராவின் மதனப்பள்ளியில் ராயலசீமா தோட்டக்கலைத்துறை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனரும். முகேஷ் அம்பானியின் மகனுமான ஆனந்த் அம்பானி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது மாநிலத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நமது விவசாயிகள் தற்போது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதிசெய்கிறார்கள். எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். அதனால் தான், ஆந்திராவில் அழுத்தப்பட்ட உயிரிவாயு ஆலைகளை அமைப்பதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கிய மாநில அரசுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நன்றி தெரிவிக்கிறது.
இது விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி மாநிலத்தின் பசுமை எரிசக்தியை நோக்கிய பயணத்தை ஊக்குவிக்கும். அழுத்தப்பட்ட எரிவாயு ஆலைகள் மூலம் 3 லட்சத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், வருகிற ஆண்டுகளில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு அதிகமான வருவாயையும் மாநிலத்துக்கு வழங்கும்.
ராயலசீமா பசுமை எரிசக்தி திட்டங்களில் ரிலையன்ஸ் முதலீடு செய்து வந்ததுடன், மேம்பட்ட உற்பத்தித்துறையில் உள்ள வாய்ப்புகளையும் நாடியது. மாநில அரசின் தரவுகளின்படி, ஆந்திர பிரதேசம் ஜூன் 2024 முதல் 388 மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான முதலீட்டு ஒப்புதல்கள் ரூ.14 லட்சம் கோடியை தாண்டியுள்ளதுடன். சுமார் 11 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. இந்த முதலீடுகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ராயலசீமா பகுதிக்குச் செல்கிறது.
மாநிலத்தின் வியூக முதலீடு, டிஜிட்டல் திறன்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில் கூட்டாண்மைகள் ஆகியவற்றின் மூலம் ரிலையன்ஸ் குழுமம் இந்திய வேளாண்மைப் பள்ளிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும். இவ்வாறு ஆனந்த் அம்பானி கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம், தன்னை ஆந்திராவின் மகனாக ஏற்குமாறு ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.