

புதுடெல்லி,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவரான மோகன் பகவத், கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று பயணம் செய்தார். இந்த நிலையில், பிரோசாபாத் மாவட்டம் வழியாக ரெயில் சென்று கொண்டிருந்தபோது, மோகன் பகவத் இருந்த இ-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பெட்டியின் வெளிப்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், இந்த சம்பவத்தில் மோகன் பகவத் உள்பட யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், துண்ட்லா சந்திப்பின் வெளிப்பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். அதன்பிறகு, மீண்டும் ரெயில் டெல்லி நோக்கிப் புறப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி.பி. எஸ்.கே. பகத் உள்ளிட்டோர் பிரோசாபாத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட நபரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.