'ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக என் தலையை வெட்டிக் கொள்வேன்' - ராகுல் காந்தி

வருண் காந்தியின் சித்தாந்தத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ராகுல் காந்தி கூறினார்.
Inage Courtesy : ANI
Inage Courtesy : ANI
Published on

சண்டிகர்,

பாஜக எம்.பி.யும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தியை சந்திப்பேன், கட்டி அணைப்பேன் ஆனால், இருவரின் சித்தாந்தங்களும் வேறு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி சென்று தற்போது பஞ்சாப்பில் ராகுல் காந்தி பயணித்து வருகிறார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்தபோது ராகுல் காந்தி கூறியதாவது;-

"வருண் காந்தி பா.ஜ.க.வில் உள்ளார். அவர் என்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ அவருக்கு பிரச்சினையாகிவிடும். அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்கு அது ஒத்துவராது.

வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன், ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அதற்கு முன்பாக நான் என் தலையை வெட்டிக்கொள்வேன்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com