உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதல்; இந்திய மருந்து ஆலை தகர்ப்பு

50-க்கும் மேற்பட்ட பொதுவகை மருந்துகளை தயாரித்து, உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதல்; இந்திய மருந்து ஆலை தகர்ப்பு
Published on: 

சுமி

உக்ரைனில் நடந்த ரஷிய டிரோன் தாக்குதலில் இந்திய மருந்து நிறுவனத்தின் ஆலை தகர்க்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் நாட்டுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

ஆலை தகர்ப்பு

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் இந்திய மருந்து நிறுவனத்தின் பெரிய ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்களில் அந்த ஆலை கடுமையாக தாக்கப்பட்டது.

ஒருவர் பலி

அதன் பெரும் பகுதி தகர்க்கப்பட்டு உள்ளது. இதனால், கரும்புகை வான் வரை பரவி காணப்படுகிறது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் காயமடைந்தனர்.

முதலில், கடந்த 1994-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள மருந்துகளை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் வினியோகஸ்தராக இருந்து வந்தது. 2002-ம் ஆண்டில் பிற நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்தியது. பின்னர் முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த பொருட்களையே சந்தைப்படுத்தி வந்தது.

மருந்து உற்பத்தி ஆலை

இதன்பின்னர், 2009-ம் ஆண்டில் உக்ரைனின் சுமி நகரில் மருந்து உற்பத்தி ஆலையை திறந்தது. இந்தியாவிலும் பல ஆலைகளை திறந்து செயல்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட பொதுவகை மருந்துகளை தயாரித்து, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனையும் செய்து வருகிறது.

இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com