கர்நாடகா; ஆபத்தான மலைப்பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷிய பெண் மீட்பு

கர்நாடகாவில் மலைப்பகுதியில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷியாவை சேர்ந்த பெண்ணையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
கர்நாடகா; ஆபத்தான மலைப்பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷிய பெண் மீட்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை அடுத்த கோகர்ணா பகுதியில் ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலைப்பகுதியையொட்டி கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த வனப்பகுதியில் வெளிநாட்டினர் நடமாடுவதாக கோகர்ணா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கோகர்ணா போலீசார் ராமதீர்த்த மலைப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த குகை முன்பு மனிதர்களின் ஆடைகள் வெயிலில் காய போடப்பட்டிருந்தன.

இதை பார்த்த போலீசார் குகைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு பெண், 2 சிறுமிகள் என மொத்தம் 3 பேர் இருந்தனர். அவர்களை குகையில் இருந்து வெளியே அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் ரஷியாவை சேர்ந்த நீனா குடினா (40) மற்றும் அவரது மகள்கள் பிரக்யா (6), அமா (4) என்பது தெரியவந்தது. சுற்றுலா விசாவில் இந்தியா வந்த நீனா, குடும்பத்துடன் கோவாவில் தங்கியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக கோகர்ணாவில் உள்ள ஆன்மிக தலங்கள் மீது அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மகள்களுடன் கோகர்ணாவுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்து குகையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது விசாவை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் விசா காலாவதியாகி இருப்பதும், இதனால் அவர் சட்டவிரோதமாக குகையில் தங்கியிருந்து வந்ததுடன், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. அத்துடன் தியானம், யோகா செய்ய குகையில் அவர் தங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்து ரஷிய பெண் மற்றும் சிறுமிகளை மீட்ட போலீசார் குமட்டா தாலுகா பங்கிகோட்லு கிராமத்தில் உள்ள ஒரு மடத்தில் தங்க வைத்துள்ளனர்.விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கிய ரஷிய பெண்ணையும், அவரது 2 மகளையும் சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக உத்தரகன்னடாவில் உள்ள தூதரக அலுவலக அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியதாக தெரிகிறது.

அதன்படி ரஷிய பெண் மற்றும் அவரது குழந்தைகளை நாளை (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள தூதரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பெங்களூருவில் இருந்து அவர்கள் ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக குகையில் ரஷிய பெண் மகள்களுடன் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com