காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த ரஷிய பெண்

நவம்பர் மாதத்தில் ராகுல் யாதவ் மற்றும் ஜூலி ஆகியோரின் திருமணம் நடைபெற உள்ளது.
காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த ரஷிய பெண்
ராகுல் யாதவ், ஜூலி
Published on: 

பாட்னா,

ரஷியாவைச் சேர்ந்த ஜூலி என்பவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த தன் காதலனை தேடி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் கடந்து கிராமத்து வீட்டிற்கு வந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ரஷியாவில் மலர்ந்த காதல்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்ற வாலிபர், வேலைக்காக ரஷியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றி கொண்டிருந்தபோது ரஷியாவை சேர்ந்த ஜூலி என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண அறிமுகமாக தொடங்கிய இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. வெவ்வேறு நாடுகள், வெவ்வேறான கலாசாரம் என எதுவும் இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டையாக அமையவில்லை.

குடிசை வீடு

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராகுல் யாதவ் ரஷியாவிலிருந்து தனது சொந்த ஊரான பீகாருக்கு திரும்பியுள்ளார். காதலனை பிரிந்திருக்க முடியாத ஜூலி, தன் காதலனை தேடி இந்தியா வர துணிந்தார். அதன்படி, ரஷியாவிலிருந்து புறப்பட்டு பீகாரில் உள்ள ராகுலின் கிராமத்து வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் வந்து இறங்கினார்.

அதிர்ச்சி

அங்கு வந்த ரஷிய குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ராகுல் அங்கு வசதியான சூழலோ இல்லாமல், ஒரு சாதாரண எளிமையான வீட்டில்தான் வசித்து வந்தார். ஆனால், ஜூலியோ ராகுலின் பொருளாதார நிலையையோ, வீட்டின் வசதியையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

ஆடம்பரம் வேண்டாம்

ஆடம்பரமான வாழ்க்கையை விட, தான் காதலித்த ராகுலுடன் இணைந்து வாழ்வதே முக்கியம் என்ற ஒற்றை நோக்கில், அந்த எளிய வீட்டிலேயே அவரோடு வாழ்வதற்கு ஜூலி சம்மதம் தெரிவித்துள்ளார். ரஷிய பெண் தன் குடும்பத்துடன் கிராமத்து குடிசை வீட்டிற்கு வந்ததை காண அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் திரண்டனர்.

நவம்பரில் திருமணம்

தற்போது இரு வீட்டாரும் நேரில் சந்தித்து பேசி, காதலர்களின் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, வரும் நவம்பர் மாதத்தில் ராகுல் யாதவ் மற்றும் ஜூலி ஆகியோரின் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிகிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com