

சபரிமலை,
மண்டல சீசனில் சபரிமலைக்கு சென்றபோது தமிழ்நாட்டை சேர்ந்த அய்யப்ப பக்தர் உள்பட 7 பேர் மாரடைப்பால் திடீரென இறந்தனர். எனவே உடல்நலம் குன்றியவர்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் சில பக்தர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அந்த வகையில் சபரிமலை மற்றும் பம்பையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 19,650 பக்தர்கள் சிகிச்சை பெற்று உள்ளனர். 14 பேர் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் தப்பினர்.
18-ந்தேதி முதல் கடந்த 7 நாட்களில் தமிழ்நாட்டை சேர்ந்த விமல் (44 வயது), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராம்பாபு (45 வயது), எமா வராவு ரமேஷ் (45 வயது), கேரளத்தை சேர்ந்த சுரேஷ் (42 வயது), மல்லிகா ராஜப்பன் (59 வயது) உள்பட 7 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உடல் நலம் குன்றியவர்கள், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மலை ஏற்றத்தை தொடரவும் மாவட்ட மருத்துவ அதிகாரி கே.கே.சியாம் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே சபரிமலைக்கு நடந்து வரும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்க தடை விதித்து ரான்னி வனச்சரக அதிகாரி டி.கே.மனோஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
சன்னிதானத்தில் பாண்டித்தாவளம், உரக்குழி, புல்லுமேடு வனப்பகுதி, சரல்மேடு ஆகிய இடங்களில் வனத்துறையின் பாம்புபிடி வீரர்கள் மற்றும் யானை விரட்டி குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் விஷ வீரியம் மிக்க பாம்புகள் உள்பட 40-க்கும் அதிகமான பாம்புகள் சன்னிதானத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்குள் விடப்பட்டு உள்ளது. பக்தர்கள் வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்காமல் தங்களது பயணத்தை தொடர வேண்டும். குறிப்பாக குரங்கு, அணில் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பக்தர்கள் உணவளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உணவளிப்பது பாதுகாப்பற்றது. இவ்வாறு அவர் கூறினார்.