சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருதை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் சர்வதேச புலிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த (2018) ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,967 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, உலகளாவிய அளவில் அதிகமாகவும், பாதுகாப்பாகவும் புலிகள் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், உலக அளவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என 9 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், காலக்கெடுவுக்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே இதை நாம் சாதித்து விட்டோம் என்று மோடி கூறினார்.

புலிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசுடன் இணைந்து செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் மக்களுக்கு அதிகமான வீடுகளை கட்டுவதுடன் வனவிலங்குகளுக்கான வாழ்விடங்களும் அதிகமாக அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விழாவில், புலிகளை பாதுகாப்பது, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை தடுப்பது, வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு வழங்கப்பட்டது.

இதற்கான விருதை பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக மண்டல காப்பாளர் நாகநாதன் பெற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com