

ஐதராபாத்,
பாகிஸ்தானில் எங்களுடைய மகள் முகமதியா பேகத்தை அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் சித்தரவதை செய்கிறார்கள், என்னுடைய மகளை காப்பாற்றுங்கள் என ஐதராபாத்தை சேர்ந்த பெற்றோர் முகமது அக்பர் மற்றும் ஹஜ்ரா வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்க்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். சுஷ்மா சுவராஜ் ஜி என்னுடைய மகள் மிகவும் துயரத்தில் உள்ளார். என்னுடைய மகளை திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள். இந்தியாவின் மகள் பாகிஸ்தானில் சிக்கி உள்ளார், அவள் திரும்ப வர உதவி செய்யுங்கள்., என சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் கண்ணீர் மல்க முகமது அக்பர் மற்றும் ஹஜ்ரா தம்பதியினர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
எங்களுடைய மகள் அங்கு சென்று நீண்ட நாள் ஆகிறது, இதுவரையில் அவள் திரும்ப அனுப்பப்படவில்லை. அவளுடைய விசா வந்து விட்டது, ஆனால் அவர்கள் அவளை திரும்ப அனுப்ப விரும்பவில்லை. மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எங்களுடன் இருக்க விரும்புகிறார். அவளுடைய கணவர் அவளை அடிக்கிறார். எங்களுடைய மகளுக்கு உணவு வழங்கப்படுவது கிடையாது. எங்களுடைய மகளை திரும்ப அழைத்துவர உதவி செய்யுங்கள் சுஷ்மா ஜி என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
முகமதியா பேகத்திற்கு 23 வயதாக இருந்த போது 1996-ல் மஸ்கட்டில் வேலை செய்த பாகிஸ்தானியர் முகமது யூனிசுடன் திருமணம் நடைந்து உள்ளது. திருமணத்திற்கு பின்னர் முகமதியா பேகத்தின் வாழ்க்கையானது மிகவும் மோசமாக சென்றது எனவும் பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அக்பர் ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக இணையதள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திருமணம் நடைபெற்ற போது முகமது யூனிஸ் ஓமன் நாட்டை சேர்ந்தவர், மஸ்கட்டில் பணியாற்றுகின்றேன் என எங்களிடம் கூறினார் என்றார். திருமணம் நடைபெற்று 12 வருடங்கள் கழித்துதான் என்னுடைய மகள் பேகத்திற்கு, யூனிஸ் பாகிஸ்தானியர் என தெரியவந்தது எனவும் குறிப்பிட்டு உள்ளார். 21 வருடத்தில் பேகம் கடந்த 2012-ம் ஆண்டு மட்டுமே ஐதராபாத் வந்தார் எனவும் அக்பர் குறிப்பிட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் ஏற்கனவே சுஷ்மா சுவராஜ் தலையிட்டு உள்ளார்.
இவ்வருடம் மார்ச் மாதம் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேகத்தை சந்தித்து பேசினார்கள், அவர்களிடம் இந்தியாவிற்கும் வருவதற்கு உதவி செய்யுமாறும் பேகம் கேட்டுக்கொண்டதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்து இருந்தார். பேகத்தின் பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது, எனவே அதனை புதுபித்துக் கொடுக்க இந்திய தூதகரத்திடம் கேட்டுக்கொண்டதாக சுஷ்மா தெரிவித்து இருந்தார். இந்தியாவிற்கு பயணம் செய்ய பேகத்திற்கு நவம்பர் மாதம் விசா வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, விசா காலம் டிசம்பர் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது என தெரிவிக்கப்படுகிறது.
எல்லா உதவியும் கிடைத்து விட்டது ஆனால் எங்களுடைய மகளை திரும்ப அனுப்ப அவளுடைய கணவர் மறுக்கிறார், அவளை திரும்ப அனுப்ப மாட்டேன் என கூறி வருகிறான். விரைவில் விசா காலாவதி ஆக உள்ளது. தொடர்ந்து என்னுடைய மகளை தாக்கி வருகிறார்கள், அவளை காப்பாற்றி இந்தியாவிற்கு அழைத்துவர உதவி செய்யுங்கள் என சுஷ்மாவிற்கு வீடியோ மூலம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.