

புதுடெல்லி,
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த வழக்கு மீது சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தில் பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் டெல்லியில் சுப்ரீம்கோர்ட்டு நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட 11 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கூட்டாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "வாக்காளர் பட்டியலில் இருந்து முறையற்ற வகையில் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும். மாநிலங்களில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், மனுவில் பல குளறுபடிகள் இருப்பதாகக் கூறி சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் அதனை விசாரணை பட்டியலில் சேர்க்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் அலுவலக தகவலின்படி, இந்த மனுவில் மொத்தம் 14 குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, வழக்கின் கூட்டு மனுதாரரான காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இணைக்கப்படவில்லை என்றும், மனுவின் சில பக்கங்கள் படிக்க முடியாதவாறு மங்கலாகவும், சில பக்கங்கள் விடுபட்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த். "நாங்கள் இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு பட்டியலிடத் தயாராகவே இருக்கிறோம். மனுவில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் முதலில் சரி செய்யுங்கள்" என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு, எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது. ராகுல்காந்தி, கார்கே, அகிலேஷ், தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு விசாரிக்க உள்ளது.