கைது செய்த நேரம் கணக்கு கிடையாது... பிடித்த 24 மணி நேரத்திற்குள் கைதியை ஆஜர்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கைதான நபர் காவலில் எடுக்கப்பட்ட சரியான தேதியையும் நேரத்தையும் மாஜிஸ்திரேட்டுகள் ஆவணங்களில் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on: 

புதுடெல்லி,

வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் காலக்கெடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அதாவது, கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேர காலக்கெடுவானது, காவல்துறை முறைப்படி கைது நடவடிக்கையை பதிவு செய்யும் நேரத்திலிருந்து அல்ல, மாறாக அவர் பிடிபட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படும் நேரத்திலிருந்தே தொடங்குகிறது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

காலதாமதம் கூடாது

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22(2)-ன் பிரதான நோக்கம், எந்தவொரு குடிமகனும் உரிய நீதித்துறை மேற்பார்வை இன்றி நீண்ட காலம் காவலில் வைக்கப்படுவதைத் தடுப்பதாகும். இதன்படி, கைது செய்யப்படும் எவரையும் பயண நேரம் நீங்கலாக 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். இந்த விதியைச் சுட்டிக்காட்டுவதற்காகக் காவல்துறையினர் காவலில் வைக்கும் நேரத்தையும், கைது பதிவு செய்யும் நேரத்தையும் வெவ்வேறாகக் காட்டி காலதாமதம் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சட்டப்பூர்வமான இந்த அவகாசத்தைத் தாண்டி கூடுதல் விசாரணை காலம் என்ற பெயரில் எவரையும் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்க முடியாது.

முந்தைய தீர்ப்பை ஏற்க மறுத்த நீதிமன்றம்

இந்தத் தீர்ப்பின் மூலம் மாஜிஸ்திரேட்டுகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கைதான நபர் காவலில் எடுக்கப்பட்ட சரியான தேதியையும் நேரத்தையும் மாஜிஸ்திரேட்டுகள் ஆவணங்களில் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை காவலில் வைக்கப்பட்ட காலம் நியாயமற்ற முறையில் நீட்டிக்கப்பட்டிருந்தால், அது 24 மணி நேரத்திற்குள் இருந்தாலும் கூட மாஜிஸ்திரேட்டுகள் காவலில் அனுப்ப மறுக்கலாம்.

மேலும், ஒடிசா, சென்னை மற்றும் கேரளா ஆகிய உயர் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் வழங்கிய முந்தைய தீர்ப்புகள் சட்டப்படி சரியல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

X