2 வயது குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் ரூ1.5 லட்சம்... இணையத்தில் கொந்தளிக்கும் பெற்றோர்

லக்கானி தனது பதிவில், "2 வயது குழந்தையின் ஆரம்ப பள்ளிப் படிப்பு இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
2 வயது குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் ரூ1.5 லட்சம்... இணையத்தில் கொந்தளிக்கும் பெற்றோர்.
மழலையர் பள்ளி
Published on

புது டெல்லி,

இந்தியாவில் பள்ளி சேர்க்கைக்கான கட்டணக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2 வயது குழந்தையின் மழலையர் பள்ளி பிரீ.கேசி சேர்க்கைக்காக ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கேட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழலையர் பள்ளிக்கு நுழைவு கட்டணம்

அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரிதேஷ் லக்கானி என்பவர் தனது 2 வயது குழந்தையைப் பள்ளியில் சேர்க்க முற்பட்டார். அப்போது, அங்குள்ள ஒரு புகழ்பெற்ற மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் 'கட்டாய நன்கொடை' கேட்கப்பட்டுள்ளது. இந்த தொகையைச் செலுத்த தவறினால், குழந்தைக்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வில் குழந்தை 'தோல்வி' அடைந்துவிட்டதாகக் கூறி, அதைவிட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகத் தரப்பில் மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

"விளையாடும் வயதில் நுழைவுத்தேர்வா?"

இதுகுறித்து லக்கானி தனது பதிவில், "2 வயது குழந்தையின் ஆரம்ப பள்ளிப் படிப்பு இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கக் கூடாது. அவர்கள் விளையாடி மகிழ வேண்டிய வயதில், நுழைவுத் தேர்வு என்ற பெயரில் குழந்தைகளை மதிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் வெடித்த விவாதம்

இந்த தகவல் குறித்து லக்கானி, கடந்த 22-ந்தேதி அன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இணையத்தில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களுக்கு நேர்ந்த கல்விச் சுரண்டல் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

"இந்தியாவில் கல்வி என்பது சேவைத் துறையிலிருந்து மாறி, முழுக்க முழுக்க ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டது" என்றும், "இத்தகைய சட்டவிரோத நன்கொடைகளைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என்றும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com