

புதுடெல்லி,
சீனாவில் உருவாகி அங்கு பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவிவிட்டது.
சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக அங்கு கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
மனிதகுலத்தையே அச்சுறுத்தி வரும் இந்த நோய்க்கிருமியால் சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா, ஓட்டல் தொழில் உள்ளிட்ட பிற துறைகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை ஒருவர் பலியாகி இருக்கிறார். அவர் கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த முதியவர் ஆவார். இந்தியாவில் இந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும் ஏராளமான பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நோய்க்கிருமி பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் டெல்லி, கேரளா, மணிப்பூர் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. டெல்லியில் பொது நீச்சல் குளங்கள், ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆகியவை 31-ந்தேதி வரை மூடப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அனைத்து வகுப்புகளையும் 31-ந்தேதிவரை ரத்துசெய்வதாக அறிவித்து உள்ளது. இருப்பினும், வழக்கமான அலுவல் பணிகள் நடைபெறும் என்று கூறி இருக்கிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், பஞ்சாப் ஆகிய மேலும் 4 மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு இருக்கின்றன.
உத்தரபிரதேசத்தில், 11 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தேர்வுகள் இன்னும் தொடங்காத அனைத்து பள்ளி, கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் ஆகியவை 22-ந்தேதிவரை மூடப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார். தேர்வு நடந்து வரும் கல்வி நிறுவனங்களில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மத்தியபிரதேசத்தில், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் மறுஉத்தரவு வரும்வரை மூடப்படுவதாக அந்த மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இருப்பினும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வுகள், 5 மற்றும் 8-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற உள்ளன.
பீகாரில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், மிருகக்காட்சி சாலைகள் ஆகியவற்றை 31-ந்தேதிவரை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் 31-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
மராட்டிய மாநிலம் மும்பை, நவிமும்பை, புனே, பிம்ப்ரி, சின்ச்வாட், நாக்பூர் ஆகிய நகரங்களில் சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை உடனடியாக மூட மாநில அரசு உத்தரவிடப்பட்டு இருப்பதாக சட்டசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
புனே, பிம்ப்ரி ஆகிய நகரங் களில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று அவர் கூறினார். ஊழியர்களை தங்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானதை தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள், இரவு விடுதிகள், பொருட்காட்சிகள், கோடை கால முகாம்கள் ஆகியவற்றை ஒரு வாரத்துக்கு மூட முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.
மாநாடுகள், திருமண விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கவும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
கர்நாடகத்தில் ஏற்கனவே மழலையர் பள்ளிகள் மற்றும் 5-ம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு உள்ளது. 6-ம் வகுப்பு வரை பள்ளி பொதுத்தேர்வும் ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி தொடங்க இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த போட்டியை ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு உள்ளது. அடுத்தகட்டமாக என்ன செய்வது? என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகிகள் மும்பையில் இன்று (சனிக்கிழமை) கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.
கொரோனா வைரஸ் தாக்குதல் பங்கு சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் ஒரு கட்டத்தில் திடீரென்று சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகளை இழந்ததால், பங்கு வர்த்தகம் பிற்பகல் 1 மணி அளவில் நிறுத்தப்பட்டது. பின்னர் 45 நிமிடங்கள் கழித்து பங்கு வர்த்தகம் மீண்டும் தொடங்கிய போது சிறிது எழுச்சி ஏற்பட்டு சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்தது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மணிப்பூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கொரோனா பீதி காரணமாக, அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் உகான் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 112 பேர், டெல்லியில் சாவ்லா பகுதியில் உள்ள இந்தோ- திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததால், அவர்கள் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, 19-ந்தேதி எழுச்சி தின கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டு இருந்தது. அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்து இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிகளை தள்ளிவைப்பதாக அறிவித்து உள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சுமார் 900 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்துக்கு கொரோனா தொற்றியதால், அவர்கள் நடமாடிய இடங்களையும், தொடர்பு கொண்ட நபர்களையும் கண்டறியும் பணி நடந்து வருகிறது.
கொரோனோ வைரஸ் பீதி காரணமாக, ராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டத்தை வருகிற 26-ந்தேதி வரை ஒத்திவைத்து சபாநாயகர் சி.பி.ஜோஷி நேற்று உத்தரவிட்டார்.
ஈரானில் தவித்து வரும் இந்தியர்கள் இன்று அழைத்து வரப்படுவார்கள் என்றும், இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள இந்தியர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அழைத்துவரப்படுவார்கள் என்றும் மத்திய சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.