

லக்னோ,
கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டுப்பாடற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? கலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே ஆகும்.
இந்தியாவில் மாமியார்-மருமகன் உறவு என்பது தாய்-மகன் போன்ற புனிதமான பிணைப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இதை தலைகீழாக மாற்றும் வகையில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
தன்னுடைய மனைவியை உதறி தள்ளிவிட்டு வாலிபர் ஒருவர், மாமியாரையே 4 ஆண்டுகளாக காதலித்து கோர்ட்டில் முறைப்படி பதிவுத் திருமணம் (Court Marriage) செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எற்பட்ட மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால், இருவரும் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில், அந்த வாலிபருக்கு ஆறுதலாக இருந்தது அவரது மாமியார் தானாம். மகள் சண்டை போட்டுவிட்டு சென்றதும் மருமகனை அழைத்து நலம் விசாரிப்பதுபோல் ஆறுதல் கூறுவாராம். மகளின் வாழ்க்கை சீரழிவதைத் தடுக்க வேண்டிய மாமியார், மருமகனுக்கு ஆதரவாகப் பேசி வந்துள்ளார். என் மகள் அப்படித்தான். அவள் ஒரு மூர்க்கக்காரி என்று மகளுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தார். மாமியார் பேச்சில் மயங்கிய மருமகன் அவர் சொல்வதற்கெல்லாம் தலை அசைக்க தொடங்கினார்.
ஆறுதலாக தொடங்கிய இந்த விபரீத பழக்கம் நாளடைவில் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாகவே கள்ளக்காதல் நீடித்து வந்துள்ளது. தங்களது இந்த கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்தால் சமூகத்தில் அவமானம் ஏற்படும் என்பதை உணர்ந்த இருவரும், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் சொல்லாமல் இருவரும் தங்களது வீட்டை விட்டு திடீரென மாயமாகினர்.
வீட்டை விட்டு ஓடிப்போன இந்த ஜோடி நேராக கான்பூர் நகர் கோர்ட்டிற்கு சென்றனர். அங்கு தங்களது வயது சான்றிதழ்கள் மற்றும் பரஸ்பர சம்மதக் கடிதங்களைச் சமர்ப்பித்து, சட்டப்பூர்வமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு, நீதிமன்ற வளாகத்திலேயே இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், தங்களது திருமணச் சான்றிதழைக் கையில் ஏந்தியபடி, ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.
நாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாக, பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். இந்த சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என கூறி உள்ளனர். திருமணச் சடங்குகளை முடித்த பின்னர், இந்த புதுமணத் தம்பதியினர் தேனிலவுக்காக சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூகதளவாசிகள் பலரும் இந்தச் சம்பவத்தை "கலியுகத்தின் உச்சகட்டம்" என்றும், சமூக ஒழுக்கச் சீர்கேடு என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மற்றும் சில காதலுக்கு கண்ணில்லை எனவும் விமர்சித்து வருகின்றனர்.