

மும்பை,
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனாபூர் பகுதியில் ஜோதிராம் சாகேப்ராவ் சவான் என்ற விவசாயி வாழ்ந்து வருகிறார். அவரது விவசாய நிலத்திற்கு செல்ல சரியான பாதை இல்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், அவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.
தனது பிரச்சனை தீரவும் இது தொடர்பாக ஏதாவது அதிரடியாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். நேற்று மும்பையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சட்டசபை நோக்கி வந்தார்.
அங்கு உள்ள உஷா மேத்தா சவுக் பகுதிக்கு வந்த சவான், திடீரென ஒரு பாட்டிலை எடுத்து தன் மீது ஒரு திரவத்தை ஊற்றிக்கொள்ள தொடங்கினார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் மற்றும் ஊடகத்தினர் பதறிப்போயினர். அவர் தன்னைத்தானே தீயிட்டுக்கொள்ள போகிறார் என்று நினைத்த பாதுகாப்பு படை போலீசார் உடனே அவர் மீது பாய்ந்து பிடித்து தடுத்தனர்.
ஆரம்பத்தில் இது பெட்ரோல் என்றுதான் நினைத்தனர். ஆனால், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அது வெயிலுக்கு இதமாக அருந்தும் "ரஸ்னா" என்ற குளிர்பான கரைசல் என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் சவான் உண்மையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யவில்லை; மாறாக, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் அந்த துறையின் மந்திரியின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவே இந்த 'நாடகத்தை' அரங்கேற்றினார்.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் சவானை கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்புடைய துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் சரி செய்யும் வேலையை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.