உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு... பயிற்சி விமானம் விழுந்து பெண் விமானி படுகாயம்

காயமடைந்த விமானி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு... பயிற்சி விமானம் விழுந்து பெண் விமானி படுகாயம்
Published on

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாம்பூர்–பஹேரியா பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நெடுஞ்சாலை அருகே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய பெண் விமானி பலத்த காயமடைந்தார்.

விமானம் விபத்து

விபத்தின்போது விமானம் வேகமாக கீழிறங்கிய நிலையில், உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதி அருகிலிருந்த வயலில் விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்தபோது பெரும் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்துக்கு திரண்டனர்.

காயமடைந்த விமானி மகாராஷ்டிராவைச் சேர்ந்த காதர் கானின் மகள் கைனாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை மீட்புப் படையினர் மற்றும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும், மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை

அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பியைச் சீரமைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மின்சாரத் துறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் முதற்கட்டமாக சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விரிவான தொழில்நுட்ப விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வெளியான பின்னரே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிவில் விமானப் போக்குவரத்தின் இயக்குநரகம் (DGCA) ஒரு முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com