கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு - பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு - பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா(வயது 19) என்பவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தது.

பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 1993-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில், இதில் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் 2007-ம் ஆண்டு மீண்டும் சி.பி.ஐ. புதிய குழு விசாரணையை தொடங்கியது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் கொலைக்கான ஆதாரங்களை அழித்தது, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை திருத்தியது உள்பட பல்வேறு மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது.

இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதை இளம் கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார். இதனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என நினைத்த அவர்கள், அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாதிரியார் ஜோஸ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில் அவரை கோர்ட்டு விடுதலை செய்தது. அதன் பின்னர் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 177 சாட்சிகளில் 49 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் ஒரு கன்னியாஸ்திரி உள்பட சிலர் முரண்பட்ட தகவல்களை அளித்ததால், வழக்கு விசாரணையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.

இதன் பின்னர் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது சம்பவம் நடந்த அன்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கிணற்றை எட்டி பார்த்தபடி பதற்றமாக இருந்ததாகவும், மிக மோசமான சூழலில் அவர்கள் இருந்ததாகவும் ராஜு என்ற திருடன் அளித்த வாக்குமூலம் தான், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரையும் இந்த வழக்கில் சிக்க வைத்தது.

கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது. தீர்ப்பை கேட்டதும் கன்னியாஸ்திரி செபி கதறி அழுதார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கான தண்டனை விவரத்தை இன்று திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வழக்கின் 2வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com