சீரம் இந்தியா தீ விபத்து: தடுப்பூசி பதப்படுத்தும், தயாரிப்பு பணியில் பாதிப்பு இல்லை; மராட்டிய முதல் மந்திரி பேட்டி

சீரம் இந்தியா தீ விபத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணி, பதப்படுத்துதலில் பாதிப்பு இல்லை என மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
சீரம் இந்தியா தீ விபத்து: தடுப்பூசி பதப்படுத்தும், தயாரிப்பு பணியில் பாதிப்பு இல்லை; மராட்டிய முதல் மந்திரி பேட்டி
Published on

புனே,

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து, புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி அளித்தது. ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது. புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. பூட்டான், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் சீரம் நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நுழைவு வாயிலில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4 மற்றும் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

கட்டிடத்தில் நடந்து கொண்டிருந்த வெல்டிங் தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் இந்திய சீரம் இன்ஸ்டியூட்டின் தலைமை செயல் அதிகாரி பூனம் ஆதர்வாலாவை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து உத்தவ் தாக்கரே பேட்டியளித்துள்ளார். நடந்த சம்பவம்பற்றி அவர் கூறும்பொழுது, சீரம் மையத்தில் தீ விபத்து என தகவல் வந்தது. ஆனால், தடுப்பூசி தயாரிக்கும் பகுதி மற்றும் பதப்படுத்தும் பகுதி நல்லவேளையாக பாதிக்கப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து தொலைவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது என ஆதர் மற்றும் சைரஸ் என்னிடம் கூறினர் என்று பேசியுள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்தப்படும். ஆய்வு அறிக்கை வரும்வரை அதுபற்றி எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com