

ஆனேக்கல்,
ஆனேக்கல் அருகே சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை விற்பனை செய்த ரவுடிகள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல் தாலுகா ஹல்தெனஹள்ளி ரெயில்வே கேட் பகுதியில் ஒருவர் நாட்டு துப்பாக்கிகள் விற்பனை செய்வதாக ஆனேக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் பிரதீப் ரமேஷ் என்பதும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் விற்பனை செய்ய அங்கு சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையை அடுத்து, சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான மனோஜ் என்ற ஜாக்கி, ரிஸ்வான் பாஷா, நஞ்சப்பா, வெங்கட ராஜு, கோபி மற்றும் சிவராஜ் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மேலும் 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, ரவுடிகளான ரிஸ்வான் பாஷா மற்றும் மனோஜுக்கு விற்பனை செய்யப்பட்டவை ஆகும். மேலும், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தாவூத் என்பவரே இந்த கும்பலின் முக்கிய நபர் என்பதும், பிரதீப் ரமேஷ் மூலம் ரெயில்களில் துப்பாக்கிகளை கடத்தி வந்து ஆனேக்கல்லில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கைதான 7 பேர் மீதும் கடுமையான 'கோகா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த துப்பாக்கி விற்பனை கும்பலின் பின்னணியில் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டு, 5 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.