

புதுடெல்லி,
மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் பீகார் முன்னாள் முதல்மந்திரி லாலு பிரசாத்துக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்றுமுன்தினம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. ஏற்கனவே மற்ற 3 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் நெஞ்சுவலி காரணமாக தற்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4வது வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பா.ஜனதா எம்.பி.யும் பிரபல நடிகருமான சத்ருகன் சின்கா நேற்று லாலு பிரசாத்தை சந்தித்து பேசினார். லாலுவை சந்தித்து பேசுவது எப்போதும் மன தைரியத்தையும், மன அமைதியையும் அளிப்பதாகும். அவரை சந்தித்தபோது அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்த சத்ருகன் சின்கா ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தலைவரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.