

மும்பை,
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் மும்பை அருகே கடலில் எண்ணெய் கிணறு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த கப்பலை மூழ்கடித்து சென்றது பெரும் துயரமாக அமைந்தது.
அந்த கப்பலில் 261 ஊழியர்கள் இருந்தனர். போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் 186 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மற்ற 75 பேரின் கதி தெரியாத நிலையில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் வரை 26 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். நேற்று மேலும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் கப்பல் மூழ்கிய விபத்தில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.
எஞ்சிய 26 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே மற்றொரு இழுவை படகில் தவித்த 13 பேரில், 2 பேர் மீட்கப்பட்டதாகவும் மற்ற 11 பேர் மாயமானதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களையும் சேர்த்து இன்னும் 37 பேரை தேடும் பணி துரித்தப்படுத்தப்பட்டு உள்ளது.