

மும்பை,
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கும் சிவசேனா கட்சி மராட்டிய மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இருப்பினும் அண்மைக்காலமாக இரு கட்சிகளுக்கிடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிவசேனா கட்சி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியாவதாக செய்திகள் வெளி வரும் நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து உத்தர பிரதேச அரசை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:- உத்தர பிரதேசத்தில் உள்ள பருக்தாபாத் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பச்சிளம் குழந்தைகள் எனவும் ஆகிஸிஜன் பற்றக்குறை காரணமாக உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். சுகாதார சேவைகள் ஒரு ஏஞ்சல் போன்று இருக்க வேண்டும்,ஆனால் உத்தர பிரதேசத்தில் மரணத்தின் தூதுவர் போல இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் 50 குழந்தைகள் பலியானதை முன்வைத்து மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று உத்தர பிரதேசத்தில் அதிகாரத்தில் உள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பலியானது உத்தர பிரதேசத்தில் சுகாதார சேவைகள் குறித்து மிகப்பெரும் கேள்வி எழுப்புகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.