இந்தி மொழிக்கு சிவசேனா திடீர் ஆதரவு

இந்தி மொழிக்கு சிவசேனா திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது. அது நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் கூறியுள்ளது.
இந்தி மொழிக்கு சிவசேனா திடீர் ஆதரவு
Published on

தமிழக அமைச்சர் பேச்சு

கோவை பாரதியா பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியை திணிக்க கூடாது என்றார்.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுவதையும் கேள்வி எழுப்பிய அவர், இந்தி படித்தவர்கள் இங்கு பானி பூரி விற்பதாகவும் கூறியிருந்தார். கவர்னர் முன்னிலையில் அமைச்சர் இவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இந்தி மொழிக்கு சிவசேனா திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லா மாநிலங்களிலும் ஒரே மொழி

எங்களது கட்சி எப்போதும் இந்தியை மதிக்கிறது. எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது எல்லாம் நாடாளுமன்றத்தில் இந்தியில் தான் பேசுவேன். ஏனெனில் நான் பேசுவதை நாடு கேட்க வேண்டும். இந்தி நாட்டின் மொழி. இந்தி தான் ஏற்றுக்கொள்ள கூடிய மொழி. நாடு முழுவதும் அது பேசப்படுகிறது. இந்தி திரையுலகம் நாட்டிலும், உலக அளவிலும் மதிப்பு மிக்கதாக உள்ளது.

எனவே எந்த மொழியும் அவமதிக்கப்பட கூடாது. எல்லா மாநிலங்களிலும் ஒரே மொழி (இந்தி) இருக்க வேண்டும் என்ற சவாலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு, ஒரே சின்னம் போல ஒரே மொழியும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் காரணமாக ஆதரவு?

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை மாற்று மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் சிவசேனா கட்சி ஒரே நாடு, ஒரே மொழி' கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல வடஇந்தியர்கள் மும்பைக்கு வந்து மராத்தியர்களின் வேலை வாய்ப்புகளை பறித்து கொண்டதாக சிவசேனா ஒரு காலத்தில் குற்றம்சாட்டி வந்தது. ஆனால் மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மும்பையில் உள்ள கணிசமான வடஇந்திய வாக்குகளை குறி வைத்து சஞ்சய் ராவத் இந்தி மொழிக்கு ஆதரவாக பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com