புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்

புதுச்சேரியில் 2 மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர். இதற்கிடையே அன்றைய தினம் இரவே 2 மாணவிகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அந்த மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, மாணவிகள் இருவரையும் புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்துள்ள குருசுக்குப்பத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி ராஜூ என்ற புஷ்பராஜ் (வயது 25), வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணி என்ற மணிமாறன் (27) ஆகியோர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்கள்.

மாணவிகளும் அந்த ஆசை வார்த்தையை நம்பி அவர்களுடன் பழகி இருக்கிறார்கள். கடந்த 2-ந்தேதி இருவரையும் கடற்கரை பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் அந்த 2 மாணவிகளிடம் தனித்தனியாக பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தநிலையில் மீண்டும் அதே பகுதியில் இரண்டு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com