திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதியானதால் அதிர்ச்சி
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
ஆந்திரா,
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், "ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டுகூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த சூழலில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில், "சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது. எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா..? " என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.