

பெங்களூரு,
பெங்களூருவில் அணைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் 2 பேரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆனால் 2 பேரும் நேருக்குநேர் பார்க்காததுடன், பேசிக்கொள்ளாமல் மவுனமாக இருந்தனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு சென்று ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந் தித்து பேசி தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டார்.
இதுகுறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அவருக்கு கட்சி மேலிட தலைவர்கள் உறுதியளித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. முதல்-மந்திரி பதவி விவகாரத்தால் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அவர்கள் 2 பேரும் மேடையில் பேசிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.