தாமரை பூ வடிவிலான சிவமொக்கா விமான நிலைய மேற்கூரையை மூட வேண்டும்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தாமரை பூ வடிவில் உள்ள சிவமொக்கா விமான நிலைய மேற்கூரையை மூட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமரை பூ வடிவிலான சிவமொக்கா விமான நிலைய மேற்கூரையை மூட வேண்டும்
Published on

சிவமொக்கா:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தாமரை பூ வடிவில் உள்ள சிவமொக்கா விமான நிலைய மேற்கூரையை மூட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவமொக்கா விமான நிலையம்

சிவமொக்கா விமான நிலையம் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. கர்நாடகத்தில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக இது 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். சிவமொக்கா விமான நிலையத்தின் மேற்கூரை தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்துக்கு பிரதமர் மோடியே அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கர்நாடகத்தில் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையாட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் அரசியல் கட்சி தலைவர்களின் போஸ்டர்கள், பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் சிவமொக்கா விமான நிலைய மேற்கூரை தாமரை பூ வடிவில் உள்ளதால் அதனை மூட வேண்டும் என சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தேவேந்திரப்பா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேற்கூரையை மூட வேண்டும்

அதில், கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தாமரை பூ வடிவில் உள்ள சிவமொக்கா விமான நிலையத்தின் மேற்கூரையை உடனே மூட வேண்டும். தாமரை பூ வடிவில் உள்ள விமான நிலையத்தை வைத்து பா.ஜனதாவினர் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வருகிறார்கள். எனவே சட்டசபை தேர்தல் முடியும் வரை விமான நிலையத்தின் மேற்கூரையை மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்பட்டது முதல் இன்று வரை அங்கு விமான போக்குவரத்து தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என விமான பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com