

சிங்கப்பூர்
1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிய மாநிலத்தின் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். 3 நாட்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோரை யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து பேசினார்.
இதில் பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, நீடித்த வளர்ச்சி, இணைப்பு மற்றும் நவீன உற்பத்தி உள்ளிட்ட விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இரு நாடுகளுக்கான விரிவான மூலோபாய நட்புறவுக்கான செயல் திட்டம் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அவருடைய இந்த பயணத்தின்போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய கூட்டங்களில் பங்கேற்று, கலந்துரையாடினார். இதேபோன்று, உத்தர பிரதேசத்திற்கு வர கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், உத்தர பிரதேசத்தில் முதலீடு மேம்படும் வகையில், சிங்கப்பூரில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டுக்கான முன்மொழிவுகளை பெற்றிருக்கிறோம் என யோகி ஆதித்யநாத் கூறினார். இதில், ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிய மாநிலத்தின் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.