

கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மாவூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது வகுப்பறையின் மேற்கூரை ஓடுகளின் இடுக்குகளில் ஏதோ நகரும் சத்தம் கேட்டு மாணவர்கள் நிமிர்ந்து பார்த்தனர். அங்கு பெரிய பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக உஷாரான பள்ளி நிர்வாகத்தினர், அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு வகுப்பறையில் இருந்த மாணவர்களை பத்திரமாக மாற்று வகுப்பறைகளுக்கு மாற்றினர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட பாம்பு மீட்பு வீரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
பாம்பு மீட்பு வீரர் வகுப்பறைக்குள் சென்று மேற்கூரையின் ஓடுகளுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினார். ஆனால், அந்த பாம்பு மேற்கூரையின் இடுக்குகளுக்குள் வேகமாக சென்று மறைந்து கொண்டது. இதனால் பாம்பை பிடிப்பதில் கடும் சவாலும் தாமதமும் ஏற்பட்டது. எனினும், மீட்பு வீரர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.
பிடிக்கப்பட்ட பாம்பு விஷமற்றது என தெரிந்ததும் அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் இதனை தொடர்ந்து, பிடிபட்ட அந்த பாம்பு ஒரு சாக்கில் பத்திரமாக கட்டப்பட்டது. பின்னர் அந்த பாம்பை அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவிக்க வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.