85 வயது தந்தையின் வீட்டில் வசிக்க மகன், மருமகளுக்கு உரிமை இல்லை! - டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

முதியவரின் மகனும் மருமகளும் 4 வாரங்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
85 வயது தந்தையின் வீட்டில் வசிக்க மகன், மருமகளுக்கு உரிமை இல்லை! - டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
Published on: 

புதுடெல்லி,

பெற்றோருக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர்களது சொந்த வீட்டில் பிள்ளைகள் தொடர்ந்து வசிக்க முடியாது என்று கூறியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம், 85 வயது முதியவரின் வீட்டில் வசித்து வந்த அவரது மூத்த மகனும் மருமகளும் 4 வாரங்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், முதியவர்கள் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1980-ல் வாங்கிய சொந்த வீடு

டெல்லியைச் சேர்ந்த 86 வயது முதியவர், டெல்லி வளர்ச்சி ஆணையத்திடமிருந்து கடந்த 1980-ஆம் ஆண்டு ஒரு வீட்டை வாங்கியுள்ளார். பின்னர், 2000-ஆம் ஆண்டு அந்த வீட்டை முழுஉரிமைச் சொத்தாக தன் பெயரில் மாற்றியுள்ளார். அவரது மூத்த மகனும் மருமகளும் 2003-ஆம் ஆண்டு திருமணத்துக்குப் பிறகு அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, 2008-ஆம் ஆண்டு தனது இளைய மகனுக்குத் திருமணம் நடைபெற்ற பிறகு, மூத்த மகனையும், மருமகளையும் தனிக்குடித்தனம் செல்லுமாறு தந்தை கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் வீட்டைக் காலி செய்ய மறுத்ததுடன், தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், தனக்குக் கொடுத்து வந்த பராமரிப்புச் செலவை நிறுத்திவிட்டதாகவும் முதியவர் குற்றம்சாட்டினார்.

மனைவி இறந்த பிறகு துன்புறுத்தல் அதிகரிப்பு

2020-ஆம் ஆண்டு நவம்பரில் மனைவி இறந்த பிறகு இந்தத் துன்புறுத்தல் மேலும் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன் மூத்த மகனும் மருமகளும் தன்னை மிரட்டியதுடன், தனது இளைய மகனைத் தாக்கியதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இதையடுத்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007-ன் கீழ், தனது மூத்த மகன் மற்றும் மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்றவும், தனக்குப் பராமரிப்புத் தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஆனால், முதியவர் கூறிய துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், இரு மகன்களுக்கும் இடையிலான தொழில் தகராறைத் தீர்த்துக்கொள்ள அவர் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் மனுவை முடித்து வைத்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கோட்ட ஆணையரும் இதனை உறுதி செய்தார். இதனை எதிர்த்து முதியவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து மகனும் மருமகளும் முதியவரைப் பராமரிக்க மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

துன்புறுத்தலை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மகாஜன் நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இரு மகன்களுக்கும் இடையே தொழில் தொடர்பான தகராறு இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு, முதியவரின் குற்றச்சாட்டுகளைச் சந்தேகிக்க முடியாது. 2022-ஆம் ஆண்டு முதல் அவர் பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு மற்றும் உதவி வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதியவர்களைப் பிள்ளைகள் துன்புறுத்தும் சம்பவங்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே நடைபெறுவதால், அவற்றைத் தனிப்பட்ட சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பது கடினம். வீட்டிலிருந்து பிள்ளைகளை வெளியேற்றக் கோரும் முதியவர், துன்புறுத்தப்பட்டதைத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

தனது சொத்தைப் பாதுகாத்து, அதில் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ வேண்டிய தேவை இருப்பதைத் தெரிவித்தாலே போதுமானது என்று நீதிபதி தெரிவித்தார்.

4 வாரங்களில் வீட்டைக் காலி செய்ய உத்தரவு

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட ஆணையர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, முதியவரின் மகனும் மருமகளும் 4 வாரங்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி முதியவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

முதியவர்களின் உரிமையை உறுதி செய்த தீர்ப்பு

88 வயதில் ஒருவர் தனது சொந்த வீட்டில் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதே முக்கியம். தன் மீதான பிள்ளைகளின் துன்புறுத்தல் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் பெற்றோர் நிரூபிக்க வேண்டியதில்லை என்பதே நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.

X