26 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்

நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
26 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ந் தேதி கால வரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மத்திய அரசுக்கு சொந்தமான டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மனு தள்ளுபடி

அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, அவரது மனைவி ஆங்மோ, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை முன்தினம் விசாரித்த தனி நீதிபதி மினி புஷ்கர்ணா, சோனம் வாங்சுக்கின் சிகிச்சையில் தலையிட வேண்டியது இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மருத்துவமனை மாற்றம்

அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் அமர்வில் ஆங்மோ மேல்முறையீடு செய்தார். அவரது மனு, தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜாஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக்கை வேறு (தனியார்) மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி சப்தார்ஜங் மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு சோனம் வாங்சுக் மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, ‘மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அவரது உடல்நிலம் சீரடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்ற பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

முடிவுக்கு வந்த உண்ணாவிரதம்

இந்த நிலையில், சோனம் வாங்சுக் 26 நாட்களுக்கு பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார். மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்தக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சற்று முன்பு, மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் மற்றும் லே லடாக் உச்ச அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்களுக்குப் பிறகு நான் இறுதியாக எனது உண்ணாவிரதத்தை முடித்தேன்.

முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை சந்தித்து அல்லது கடிதங்களில் கையெழுத்திட்டு, உண்ணாவிரதத்தை முடிக்குமாறு வலியுறுத்தியிருந்தனர். நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும், பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

உண்ணாவிரத்தை முடிப்பதற்கான நிபந்தனைகளை மிக விரைவில் ஒரு தனி காணொளியில் விரிவாக விளக்குவேன். இதற்கிடையில், எங்கும் எந்த விதமான வன்முறையையும் அனுமதிக்காமல் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அபிஜித் தீப்கே

இது குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறுகையில், “சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது நிம்மதியையும், ஆறுதலையும் அளிக்கிறது. அவரது துணிச்சல் மற்றும் தியாகத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உயிரை ஆபத்தில் வைத்து, இந்த நாட்டின் ஆன்மாவை விழிப்படையச் செய்துள்ளார். இந்த நாட்டிற்கு அவரது உயிர் மிகவும் விலைமதிப்பற்றது ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com