

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அவர் இந்த பதவியை ஏற்று ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், தொடர்ந்து அவரே இடைக்கால தலைவராக பதவியில் நீடித்திடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று, இன்றுடன் ஓராண்டு முடிவுக்கு வருகிறது என்பது உண்மையே. ஆனால் அதன்பின்பு அந்த பதவி காலியாக இருக்காது.
சோனியா காந்தி தலைவராக நீடித்திடுவார். முறையான நடவடிக்கை அமலாகும் வரை அவரே அந்த பதவியை தொடருவார். அந்த நடைமுறை அமலுக்கு வரும் காலம் தொலைவில் இல்லை. இதுபற்றி காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
இந்த நடைமுறையானது காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதனை கட்சி பின்பற்றும். ஆலோசனை இறுதியில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும்பொழுது அதுபற்றிய தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.