

ஐதராபாத்,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாஃபா பாண்டியராஜன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எளிய பத்திரிகை பதிப்பின் மூலம் அரசியலை பாமர மக்களின் மனதில் பதியவைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில், அன்று தொலைநோக்குடன் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்ட தினத்தந்தி இன்று தொலைக்காட்சியாக ஊடகச்சேவை செய்வதற்கு வித்திட்டவர். ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.