

மும்பை,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் மும்பை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
லோக்மான்யா திலக் டெர்னினஸ் - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண். 01463) நாளை மறுநாள் (23-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு லோக்மான்யா திலக் டெர்மினஸ்-ல் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு - லோக்மான்யா திலக் டெர்மினஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 01464) வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு 3-வது நாள் அதிகாலை 12.55 மணிக்கு லோக்மான்யா திலக் டெர்மினஸ் சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (22-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.