‘பாபர் மசூதி இடிப்பு தவறு என்று கூறியது தேசவிரோதம் அல்ல’ மும்பை ஐகோர்ட்

பாபர் மசூதி இடிப்பு தவறு என்று கூறியது தேசவிரோதம் இல்லை எனக் கூறிய மும்பை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் மும்பைக்குள் நுழைய 2 பேருக்கு விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக நீக்கியது.
மும்பை ஐகோர்ட்
Published on

மும்பை,

வக்பு வாரிய சட்டத்திருத்தம், சிமெண்ட் குடோன்களால் ஏற்படும் காற்று மாசு மற்றும் பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக மும்பையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த போராட்டங்களில் பங்கேற்றதாக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) அமைப்பை சேர்ந்த பிரோஸ் அப்துல் வஹாப் கான், முகமது ரபிக் குலாம் ரசூல் அன்சாரி ஆகிய 2 மீது போலீசார் 3 வழக்குளை பதிவு செய்தனர். மேலும் அவர்கள் பாபர் மசூதி இடிப்பு தவறு என்று கருத்து தெரிவித்து சமூக பதற்றதை தூண்ட முயன்றதாக கூறி மும்பை நகருக்குள் நுழைய ஓராண்டுக்கு தடை விதித்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறை யீடு செய்தனர். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார் அடங்கிய தனி அமர்வு, போலீசாரின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.வழக்கு விசாரணையின்போது நீதிபதி கூறியதாவது:-

தேசவிரோதம் அல்ல

பாபர் மசூதி இடிப்பு குறித்து ஒரு கருத்தை தெரிவிப்பது தேசவிரோதமாக கருத முடியாது. அவர்களின் பார்வையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்ககூடாது என்று நினைக்கிறார்கள், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அது எப்படி தேசவிரோதமாகும்? தங்கள் கருத்தை கூற நாட்டில் அனைவ ருக்கும் உரிமை உண்டு. இந்த போராட்டங்களில் மற்ற அரசியல் கட்சி தொண்டர்களும் பங்கேற்ற நிலையில், இந்த இருவரை மட்டும் போலீசார் குறிவைத்து நடவடிக்கை எடுத்திருப்பது.

அவர்களின் மதத்தின் அடிப்படையில் தூண்டப்பட்ட பாரபட்சமான செயலாகவே தோன்றுகிறது. போராட்டத்தில் வெறும் கோஷங்கள் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கோ அல்லது பொது சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. வெறும் ஊகங்களின் அடிப்படையில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com