'தனியார் நிறுவனங்கள் கன்னடர்களை புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' - டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

கர்நாடகத்தில் கன்னடர்களே உயர்ந்தவர்கள் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
'தனியார் நிறுவனங்கள் கன்னடர்களை புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' - டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
Published on: 

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் பேசுகையில், "பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெலுங்கு. தமிழ் மொழி பேசுவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சுயவிவரத்தில் தாய்மொழி கன்னடம் என்று குறிப்பிட்டால் வேலை கிடைப்பது இல்லை. அத்துடன் பெங்களூருவில் உள்ள கல்லூரிகளில் வளாக ஆள் எடுப்பு பணியை மேற்கொள்வது இல்லை.

வேறு பகுதிகளில் குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை நியமனம் செய்து கொள்கிறார்கள். இதனால் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை. இந்த பிரச்சினைக்கு கர்நாடக அரசு தீர்வு காண வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. கன்னட அமைப்பினர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

“பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்று புகார்கள் வருவது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தில் கன்னடர்களே உயர்ந்தவர்கள். கன்னடர்களின் உரிமை, வாய்ப்புகளை புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் அரசு அனுமதிக்காது. உலகம் பெங்களூருவை தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக பார்க்கிறது.

கன்னடர்களின் திறமை மீது அபாரமான பெருமை உள்ளது. கன்னடர்களை தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பது தெரியவந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கன்னடர்களின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது.”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com