கர்நாடகத்தில் பால் விலை திடீர் உயர்வு


கர்நாடகத்தில் பால் விலை திடீர் உயர்வு
x
தினத்தந்தி 25 Jun 2024 5:30 PM IST (Updated: 25 Jun 2024 6:00 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தியது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு விளக்கம் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, நிதி ஆதாரங்களை திட்டும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு இன்று திடீரென பால் விலையை உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையை உயர்வை ஈடுசெய்யும் பொருட்டு அரை லிட்டர், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளில் கூடுதலாக 50 மில்லி பால் சேர்க்கப்படும் என்று அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது. இதனால் இதை பால் விலை உயர்வு என்று கூற முடியாது என்றும், கூடுதலாக சேர்க்கப்படும் பாலுக்கு மட்டுமே இந்த விலையை உயர்த்தி இருப்பதாகவும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதை சமாளிக்கும் பொருட்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போது பால் கூட்டமைப்புகளில் சுமார் ஒரு கோடி லிட்டர் வரை பால் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பால் (நீல நிற பாக்கெட்) ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வகை பால் பாக்கெட்டுகளின் விலையும் இதே போல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பால் விலை உயர்வு நாளை(புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து பால் விலையை உயர்த்தி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story