

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் மற்றும் கே.வி. தாமஸ் ஆகியோரை நீக்கி காங்கிரஸ் ஒழுங்காற்று குழு இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கேரள மாநில காங்கிரசின் கேரள அரசியல் விவகார குழு மற்றும் செயற்குழுவில் இருந்து கே.வி. தாமசை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று மேகாலயாவில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களையும் 3 ஆண்டுகள் சஸ்பெண்டு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி நடந்த குழு கூட்டத்தில் ஒருமனதுடன் முடிவு எடுக்கப்பட்டு, நீக்கம் மற்றும் சஸ்பெண்டு பற்றிய இறுதி முடிவை எடுப்பதற்காக, அதனை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தனர்.
கட்சி ஒழுங்குமுறைகளை மீறியதற்காக, ஒரு வாரத்தில் அதற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டு கடந்த 11ந்தேதியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஜாக்கர் இன்னும் குழு முன்பு ஆஜராகி விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
நான் கட்சியின் அடிமையல்ல என்றும், ஒழுக்கம் நிறைந்த தொண்டன் என்றும் நோட்டீசை பெற்று கொண்ட ஜாக்கர் கூறினார். குழு பரிந்துரைத்த பின்னரும் ஜாக்கரை சஸ்பெண்டு செய்ய வேண்டாம் என சோனியா முதலில் கூறியுள்ளார். இந்நிலையில், ஜாக்கர் மற்றும் தாமஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளனர்.