

புதுடெல்லி,
மேற்கு ஆசிய போர் பாதிப்பின் மீள் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயுத்துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறியதாவது:-
வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுக் காலத்தை திறம்பட நிர்வகிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. எந்தவொரு வினியோகஸ்தரிடமும் தட்டுப்பாடு இல்லை.
ஆன்லைன் முன்பதிவுகள் கிட்டத்தட்ட 98 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. சுமார் 93 சதவீத சிலிண்டர் வினியோகங்கள், வினியோக அங்கீகார குறியீடு அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. வணிக சிலிண்டர் வினியோகம் சுமார் 70 சத வீதமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களை கொண்ட 3 பேர் குழு, மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, வணிக எல்.பி.ஜி.யின் தொடர்ச்சியான விற்பனையை உறுதி செய்து வருகிறது. இந்த மாதம், சுமார் 1,92,532 டன் வணிக எல்.பி.ஜி. விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.