தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு; முதுகில் குத்தும் வரலாறு கொண்டவர் பவார்: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜனநாயக அழிப்புக்கு பங்காற்றியவர்கள் பற்றிய வரலாறு எழுதப்படும்போது, அந்த பட்டியலில் பவாரின் பெயர் நிச்சயம் இருக்கும் என்றும் கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு; முதுகில் குத்தும் வரலாறு கொண்டவர் பவார்:  காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on: 

புதுடெல்லி

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பவார் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில், அவரை முதுகில் குத்தும் வரலாறு கொண்டவர் என காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (30-ந்தேதி) கூடவுள்ளது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பவார் கட்சி ஆதரவு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

இது இந்தியா கூட்டணியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விஜய் வதத்திவார் கூறும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிகாரப்பசியுடன் உள்ளது. கடந்த காலத்திலும் மக்களை முதுகில் குத்தும் வரலாற்றை கொண்டவர் பவார் என்று குற்றச்சாட்டாக கூறினார்.

நாங்கள் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பினோம். ஆனால், ஜனநாயக அழிப்புக்கு பங்காற்றியவர்கள் பற்றிய வரலாறு எழுதப்படும்போது, அந்த பட்டியலில் பவாரின் பெயர் நிச்சயம் இருக்கும் என்றும் கூறினார்.

இறுதி முடிவு

எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அமோல் கோலே கூறும்போது, மசோதாவை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

X