ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி நவாஸ்கனி எம்.பி. மனு- சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

தேர்தல் வெற்றியை எதிர்த்து பன்னீர்செல்வம். சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
புதுடெல்லி,
கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து. சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து பன்னீர்செல்வம். சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தேர்தல் வேட்பு மனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.பி. நவாஸ்கனி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நவாஸ் கனியின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்து தள்ளுபடி செய்தது.






