டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கான தடை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்
டெல்லி,
டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிவர்த்தனையின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதனையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் 6 முதல் 8ம் தேதிவரை சோதனை நடத்தினர். மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள கணினி, மடிக்கணினி, பென் டிரைவ், சி.டி.க்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, டாஸ்மாக் நிறுவனம் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த மே 22ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தது. மேலும், அமலாக்கத்துறை அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என்று குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் 4 வாரங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்படது.
இந்த வழக்கில் இன்றைய விசாரணையின்போது, அமலாக்கத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு கூறும் கருத்துக்கள் ஊடகத்தில் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள் வரை பரவுவதாக அமலாக்கத்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் “நாங்கள் தனி நபரையோ அல்லது அமைப்பையோ தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. மாறாக வழக்கின் தன்மையை பொறுத்தே நாங்கள் கருத்துக்களை கூறுகிறோம்" என தெரிவித்தார்.






