நீட் மறுதேர்வை எதிர்த்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் விசாரணை

நீட் மறுதேர்வு வரும் 21-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் மறுதேர்வை எதிர்த்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் விசாரணை
Published on

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்வதாக கடந்த மே 12-ந்தேதி தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீட் மறுதேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் ஜூலை மாதம் நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com