மணிப்பூர் குறித்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு சுப்ரியா சுலே வரவேற்பு

மணிப்பூரின் நிலை குறித்து மோகன் பகவத் பேசிய கருத்தை வரவேற்பதாக சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
Supriya Sule RSS leader Manipur
Published on

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு முன்னுரிமை அளித்து அங்கு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காக காத்திருக்கிறது. அந்த மாநிலத்திற்கு முன்னுரிமை அளித்து வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூர் அமைதியாக இருந்தது. அங்கு நிலவும் துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையின் மணிப்பூரின் நிலை குறித்து மோகன் பகவத் பேசிய கருத்தை வரவேற்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மோகன் பகவத் கூறிய கருத்தை வரவேற்கிறேன். மணிப்பூர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நமது மக்கள் துன்புறுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.

பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என 'இந்தியா' கூட்டணி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு குழுவை அமைத்து மணிப்பூரின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மணிப்பூருக்கு நாம் நம்பிக்கை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com