

தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 35 வயது நடிகை ஒருவர் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே மாவட்டம் மிரா-பயந்தர் சாலையில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் விபசாரம் நடைபெறுவதாக காஷிமீரா போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் வாடிக்கையாளர்கள் போல மாறுவேடத்தில் அந்த ஓட்டலுக்குச் சென்றனர். அப்போது, நடிகை ஒருவரை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காகப் பணம் பெற்ற பெண் புரோக்கர், போலீசாரிடம் கையும் களவுமாகச் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து, ஓட்டல் அறையில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 35 வயது நடிகையைப் பத்திரமாக மீட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வந்த தபசும் (39) என்ற பெண்ணைக் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட தபசும் சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காஷிமீரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தபசும்மின் ஆண் கூட்டாளி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.