

புதுடெல்லி,
உலக அளவில் மிக உயர்தரமான மற்றும் விலைமதிப்பற்ற வாட்ச் தயாரிப்புக்கு பெயர் பெற்றது சுவிட்சர்லாந்து நாடு. அங்கு தயாரிக்கப்படும் ‘சுவிஸ் வாட்ச்’ என்றாலே உலகப் பணக்காரர்கள் மத்தியில் தனி மவுசு தான். இந்நிலையில், இந்த ஆடம்பர சுவிஸ் வாட்ச்களை வாங்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்முறையாக டாப் 15 இடங்களுக்குள் நுழைந்து, ஒட்டுமொத்த உலக வர்த்தகர்களையும் அதிர வைத்துள்ளது.
கடந்த ஆண்டு வரை உலகளாவிய சுவிஸ் வாட்ச் சந்தையில் இந்தியா 21-வது இடத்தில் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது வெளியான இந்திய கடிகார கூட்டமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை அசுர வேகத்தில் எட்டிப்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வாங்கும் சக்தி பல மடங்கு உயர்ந்துள்ளதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட சுவிஸ் வாட்ச்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை (2,00,000) கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த இறக்குமதி செய்யப்பட்ட வாட்ச்களின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் 1,991 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 36.8% (சுமார் 37 சதவீதம்) பிரம்மாண்ட வளர்ச்சியாகும். உலக அளவில் சுவிஸ் வாட்ச் விற்பனை மந்தமாக இருக்கும் நிலையிலும், இந்தியாவில் மட்டும் இந்த அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் பலனாக, சுவிஸ் வாட்ச்களுக்கான இறக்குமதி வரி 22 சதவிததில் இருந்து 15.71 சதவிதமாக குறைக்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் வாங்குவதை விடுத்து, இந்தியாவிலேயே நேரடியாக வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிய பணக்காரர்களின் வருகை இந்தியாவில் முதல்முறை சொகுசு பொருட்களை வாங்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சுவிஸ் வாட்ச்களை வெறும் நேரங்காட்டும் கருவியாக பார்க்காமல், சமூகத்தில் தங்களின் வெற்றி மற்றும் அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக மாறியுள்ளன.