

புதுடெல்லி,
சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் குறித்து இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே பாகிஸ்தானின் லாகூர் நகரில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை என்பதால், இந்த பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள், செனாப் நதி மீது 1,000 மொகாவாட், 48 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா கட்டிவருவதற்கு ஆட்சேபனைகளை தெரிவித்தனர். இந்த ஆட்சேபனைகளை இந்திய அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில், நீர்மின் உற்பத்தி நிலையங்களை தொடர்ந்து அமைக்கப் போவதாக இந்தியா சூசகமாக தெரிவித்தது. பாகிஸ்தானின் ஆட்சேபனைகளை மீறி, இந்தியா அந்தத் திட்டத்தை தொடர்வதை எதிர்த்து, சர்வதேச அமைப்புகளிடம் எங்கள் நாடு முறையிடவுள்ளது என்றார்.இந்த பேச்சுவார்த்தையில், இந்திய நீர்வளத்துறை ஆணையர் பி.கே. சக்சேனா தலைமையில் 9 அதிகாரிகள் கொண்ட குழு கலந்து கொண்டிருந்தது. இந்த குழு, இந்தியாவுக்கு இன்று திரும்பவுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விவரம்:-
இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கெள்கிறது.
சிந்து நதி சீனாவில் இருந்து பாய்ந்து வருவதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்பட்சத்தில் அந்நாட்டிடம் இருந்து இந்தியாவுக்கு நெருக்கடி எழலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர பிரம்மபுத்திரா நதியின் கட்டுப்பாடும் சீனா வசமே உள்ளது. பாகிஸ்தான் தனது நெருங்கிய கூட்டாளி என்பதால் இந்தியாவுக்கு பதிலடி கெடுக்கும் வகையில் இரு நதிகளையும் பாயவிடாமல் சீனா முடக்கி வைத்தால் நமது நாட்டின் வேளாண் தெழில் கடுமையாக பாதிக்கப்படும். தவிர பிரம்மபுத்திரா நதியின் கடைமடை பகுதியான வங்கதேசத்திலும் பெரும் இழப்பு ஏற்படலாம்.