ஜார்க்கண்டில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் இன்று பேரணி

போராட்டத்தை முன்னெடுத்து வரும் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
ஜார்க்கண்ட்
Published on

ஜார்க்கண்டில் அரசு பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது. அரசு தரப்புடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, இன்று சட்டசபையை நோக்கி பேரணி நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பட்டதாரி நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும், தேர்வு சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும், முறையான ஆட்சேர்ப்பு கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளில் குறிப்பாக சிபிஐ விசாரணை தொடர்பாக மாணவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படாத வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்க தயார்

இதற்கிடையே, போராட்டத்தை முன்னெடுத்து வரும் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையிலும், இன்று நடைபெறும் சட்டசபை நோக்கி பேரணியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். இன்னொரு பக்கம், மாணவர்களின் 98 சதவீத கோரிக்கைகளை ஏற்க அரசு தயாராக இருப்பதாக ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது. பொது பணியாளர் தேர்வை ரத்து செய்யவும், தேர்வு முறைகேடுகள் தொடர்பான நிதி முறைகேடுகளை அமலாக்கத்துறை விசாரிக்கவும் அரசு முன்வந்துள்ளது.

ராஞ்சியில் பலத்த பாதுகாப்பு

மேலும், தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் விரைவு நீதிமன்ற நடைமுறையை கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பணியாளர் தேர்வில் முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மாணவர்கள் இன்று சட்டப்பேரவையை நோக்கி பேரணி அறிவித்து இருப்பதால், ராஞ்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் மாணவர் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com